கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கோவில் சன்னிதானம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. தினமும் 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கொரோனா பிரச்சினையால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு கேரளாவில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அப்போது குருவாயூர் கோவிலும் திறக்கப்பட்டது. ஆனால் கோவிலின் நாலம்பலம் மட்டும் திறக்கப்படவில்லை. சன்னிதானம் செல்ல பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று முதல் குருவாயூர் கோவில் நாலம்பலம் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலின் சன்னிதானம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு செல்ல ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் இன்று முதல் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் கோவிலின் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று விளக்கு மடம் வழியாக சன்னிதானம் அமைந்துள்ள நாலம்பலத்திற்கு செல்லவேண்டும். அங்கு சாமி தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் முடிந்து வடக்கு வாசல் வழியாக வெளியே வர வேண்டும் என்று கூறி உள்ளது. தினமும் 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.