சபரிமலை அய்யப்பன் கோவிலில் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் விசேஷமாகும். மண்டல பூஜைக்காக கடந்த மாதம்(நவம்பர்) 15-ந்தேதி திறக்கப்பட்ட கோவில்நடை, கடந்த 26-ந்தேதி அடைக்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜைக்காக நேற்று(30-ந்தேதி) மாலை நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்கு கோவில் நடை திறக்கப்பட்டதை முன்னிட்டு சன்னிதானத்தில் பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என 37 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடன் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3பேர், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றிக்கு உதவியாளர்களாக பணிபுரியும் அர்ச்சகர்கள் ஆவர்.
இதனால் மேல்சாந்தி மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அர்ச்சகர்களுடன் இருந்த மற்ற அர்ச்சகர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்து மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி மற்றும் அர்ச்சகர்கள் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேல்சாந்தி தனிமைப்படுத்தப்பட்டதால் தந்திரி கண்டரரு ராஜீவரு நேற்று கோவில் நடையை திறந்துவைத்தார். 7 நாட்கள் தந்திரியே பூஜைகள் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடை திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று அதிகாலை 5மணிக்கு திறக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அச்சுறுத்ததல் காரணமாக மண்டல பூஜை சீசனில் தினமும் 3ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றுமுதல் 5ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் அனைத்திற்கும் முன்பதிவு முடிந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி மகரவிளக்கு பூஜை சீசனில் மொத்தம் 1லட்சம் பேர் சாமி தரிசனம் செய்ய முடியும். ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.