கொடைக்கானலில் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த மலை சீதாப்பழம் விளைச்சல் துவங்கியுள்ளது. எனினும், விளைச்சல் மற்றும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பழவகைகளில் ஒன்றாக சீதாப்பழம் உள்ளது. மலைப்பகுதியில் விளையும் சீதாப்பழத்தில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளது, நோய் எதிர்ப்பு சக்தியும் மலை சீதாப்பழத்தில் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேரிக்காய் சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது, மலை சீதாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. கொடைக்கானல், பள்ளங்கி, பேத்துப்பாறை, கோம்பை காடு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் சீதா பழம் விளைச்சல் ஆரம்பித்துள்ளது.
இந்த வருடம் போதிய மழையின்றி, விளைச்சல் குறைவாக உள்ளதாகவும், கடந்த வருடம் சீதாப்பழம் 120 ரூபாய்க்கு விற்ற நிலையில், இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால், 60 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கே விற்பனையாவதாக பழ வியாபரிகள் மற்றும் மலைவாழ் விவசாயிகள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.