சென்னையில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

இந்தியா – இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9 வரையும், பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன.

3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மாா்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. இதையொட்டி வருகிற 27-ந்தேதிக்குள் இரு அணி வீரர்களும் சென்னை வர உள்ளனர். உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு பிறகு வீரர்கள் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா தடுப்பு நடைமுறைகள் முடிந்ததும் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரான இந்த டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்க்க வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. வெளிஅரங்கில் நடக்கும் போட்டிகளில் 50 சதவீதம் வரை ரசிகர்களை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இருப்பினும் அனுமதிப்பதில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் நடைபெறும் இரு டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிப்பதில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில் வீரர்களின் பாதுகாப்பு விஷயத்தில் மிகக் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.

அதனால் சென்னையில் நடைபெறவுள்ள இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களை அனுமதிப்பதில்லை என பிசிசிஐயுடன் இணைந்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரசிகர்கள், சிறப்பு விருந்தினர்கள், கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் உள்பட யாரும் போட்டியைக் காண மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!