தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ், தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4163 ரன்கள் (சராசரி 40.02) அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 10 சதம் அடித்துள்ளார்.
அதிகபட்சமாக 2020ம் ஆண்டு 199 ரன்கள் அடித்ததே ஒரு இன்னிங்சில் இவரது அதிகபட்ச ரன் ஆகும். இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக டு பிளெசிஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
என் மனம் தெளிவாக உள்ளது. புதிய அத்தியாயத்திற்குள் செல்வதறகு இதுவே சரியான தருணம். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் எனது நாட்டிற்காக விளையாடுவது ஒரு கவுரவம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாக, எனது கவனம் இந்த குறுகியகால போட்டிக்கு மாறுகிறது. மேலும் உலகம் முழுவதும் முடிந்தவரை இந்த போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இதனால் நான் சிறந்த வீரராக இருக்க முடியும்.
2012ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிளெசிஸ், முதல் போட்டியிலேயே சர்வதேச கவனம் பெற்றார். முதல் இன்னிங்சில் 78 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தது மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. இந்த மாத துவக்கத்தில் ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதே இவரது கடைசி டெஸ்ட் போட்டி ஆகும்.