தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் புதிதாக 1,428 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஆண்கள் 897 பேர், பெண்கள் 531 பேர். இதன் மூலம், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஆண்கள் 4 லட்சத்து 74 ஆயிரத்து 195 பேர்; பெண்கள் 3 லட்சத்து 10 ஆயிரத்து 518 பேர்; மூன்றாம் பாலினத்தவர்கள் 34 பேர் ஆவர்.
இன்று தமிழகத்தில் 68 ஆயிரத்து 854 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 2,345 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று தமிழகத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 62 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று 397 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 495 பேர் குணமடைந்துள்ளனர்; 3 பேர் உயிரிழந்துள்ளனர்.