தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வேனில் கஞ்சா கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும், தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு வாகனங்களில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தமிழக–கேரள எல்லையான குமுளியில் இருமாநில போலீசாரும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று அதிகாலை தமிழக பகுதியான கூடலூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு வாழைத்தார்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றது. குமுளி சோதனைச்சாவடியில் அந்த வேனை, கலால்துறை இன்ஸ்பெக்டர் ராய் தலைமையில் போலீஸ்காரர்கள் ராஜ்குமார், ரவி, சைபு ஆகியோர் சோதனை செய்தனர்.
அதில் 7 ஆயிரம் கிலோ வாழைத்தார்கள் இருந்தது. அந்த வாழைத்தார்களுக்கு நடுவே கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூங்கிலாரை சேர்ந்த சரக்குவேன் டிரைவர் மாணிக்சுமன் (வயது 23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் வாழைத்தார்களுடன் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.