பாஜகவுக்கு ஜஸ்ட் 20 சீட்கள்..! சாணக்கியன் யார்..? அதிமுகாவா.. பாஜகாவா… அமித்ஷா போடும் திட்டம் என்ன..?

சென்னை,

அதிமுக கூட்டணியில் இருந்து, தமிழக பாஜகவுக்கு 20 சீட்கள் தரப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன? 20 சீட்களிலும் பாஜக வெற்றி பெற்றுவிடுமா? அதிமுக கூட்டணிக்கு பலவீனத்தை பெற்று தருமா என்பன போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

கடந்த எம்பி தேர்தலின்போது, அதிமுக தன்னுடைய கூட்டணிகளுக்கு அள்ளி அள்ளி தந்தது.. காரணம், ஆட்சி அமைக்க பாமகவின் தயவு தேவைப்பட்டது. பகைத்து கொள்ளாமல் 4 வருடத்தை ஓட்ட பாஜகவின் தயவு தேவைப்பட்டது..

ஆனால், இந்த முறை அப்படி இல்லை. சீட்டுகளை அள்ளி தரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த கூட்டணிகளுக்கு, கிள்ளிகூட தர முன்வரவில்லை அதிமுக. இதுதான் பெருத்த ஷாக்காக கூட்டணிகளின் தலையில் விழுந்தது.

வழக்கமாக ராமதாஸ்தான் கூட்டணி பேச்சுவார்த்தையை முதலிலேயே தொடங்குவார். ஆனால், இந்த முறை பாஜக முந்தி கொண்டது. கிட்டத்தட்ட 6 மாசத்துக்கு முன்பேயே 60 சீட்டுகள் வேண்டும் என்று எல்.முருகன் பேச்சை ஆரம்பித்தார். அந்த பேச்சு இறுதி வரை ஒரு முடிவுக்கு வரவில்லை. பாமகவுக்கு போக 20 சீட்டுகள் பாஜகவுக்கு ஒதுக்குவதாக முடிவாகி உள்ளது.

ஆனால், 60 கேட்டவர்களுக்கு இந்த 20 சீட் போதுமா? எதற்காக பாஜக தரப்பு அமைதியாகி விட்டது? இந்த 20 சீட் பின்னணி என்ன என்பது குறித்து ஒருசிலரிடம் நாம் பேசினோம்


“60
சீட் தரமாட்டார்கள் என்று பாஜகவுக்கே நன்றாக தெரியும்.. காரணம், நோட்டாவுக்கு கீழேதான் தமிழகத்தில் தங்களுக்கு ஓட்டு இருக்கிறது என்பதை பாஜகவும் நன்கறியும்.. என்னதான் மோடி, அமித்ஷா என தேசிய தலைவர்கள் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தாலும், 3 சதவீதத்துக்கு கீழேதான் ஓட்டு கிடைக்கும்.

இது அதிமுக தலைமைக்கும் தெரியும்.. அதனால்தான் 20 சீட்டுக்கு மேல் அதிமுக மட்டுமல்ல, பாஜகவும் எதிர்பார்க்கவில்லை.


காரணம், எந்த அளவுக்கு பாஜக தொகுதிகளை அதிகம் பெறுகிறதோ, அந்த தொகுதிகளில் எல்லாம் திமுக அசால்ட்டாக ஜெயித்துவிடும். கன்னியாகுமரி, தஞ்சையில் ஒருசில இடங்கள், கொங்கு பகுதியில் ஒருசில இடங்கள் என்று மட்டுமே பாஜகவுக்கு வாக்கு வங்கி உள்ளது. அதனால் 20 சீட்டுக்களில் 3 அல்லது 4 சீட்களை வெல்வதே கடினம்தான்.

தமிழகத்தில் பாஜகவுக்கு அதிருப்தி ஓட்டுக்கள் அதிகம் இருப்பது தெரிந்துதான், வேலூர் தேர்தலில் பாஜகவின் நிழல்கூட தொகுதிக்குள் வராமல் பார்த்து கொண்டது அதிமுக தலைமை. அதுமட்டுமல்ல கடந்த எம்பி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவுக்கு ஓட்டுக்கள் விழவே இல்லை. பாஜக மீதுள்ள கோபத்தை மக்கள் அதிமுக மீதுதான் காட்டினார்கள். இதுவும் சறுக்கலுக்கு ஒரு காரணம். இதெல்லாம் தெரிந்துதான் 20 சீட்கள் முடிவாகி உள்ளன.


ஆனால், தேர்தலுக்கு முன்பு இதெல்லாம் நடந்தால்கூட, தேர்தலுக்கு பிறகுதான் பாஜகவின் கணக்கு ஆரம்பமாகும். உதாரணத்துக்கு வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதாக வைத்து கொள்வோம். ஒரே ஒரு இடத்தில்தான் பாஜக வெற்றி பெற்று, அதிமுக 100 இடங்களில் வென்றுவிட்டதாகவும் வைத்து கொள்வோம். இந்த 100 சீட்டுக்களில் இருந்து குறைந்தபட்சம் 60 சீட்டுக்களை பாஜக தன்வசப்படுத்தி கொள்ள முடியும்.

கணிசமான சீட்டை விலைக்கும் வாங்க முடியும். அவ்வளவு ஏன் ஆட்சியிலும் பங்கு கேட்க முடியும். இதைதான் பிற மாநிலங்களில் பாஜக செய்து வரும் யுக்தி ஆகும். அதனால், அதிமுக வெற்றி என்று மட்டும் முழுவதுமாக அப்போது கணக்கில் எடுத்து கொள்ள முடியாது. பாஜகவின் ரோல் மிகப்பெரிய அளவில் அப்போது இருக்கும். அமித்ஷாவின் கணக்குகளை அவ்வளவு லேசில் எடைபோட்டுவிட முடியாது.

எனவே, இந்த 20 சீட்டுகள் பாஜகவுக்கு ஒரு பொருட்டே அல்ல, தேர்தலுக்கு பிந்தைய அரசியல்தான் மிக முக்கியம். அதனால், 60 கேட்ட பாஜகவுக்கு 20 சீட்டுகளை ஒதுக்கியது அதிமுகவின் சாணக்கியதனமா? அல்லது தேர்தலுக்கு பிந்தைய ஆட்டத்தை ஆட போகும் பாஜகவின் சாணக்கியத்தனமான என்பது இனிமேல்தான் தெரியவரும்என்றனர்.

Translate »
error: Content is protected !!