திண்டிவனம், நவ. 20: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி. இவரது கணவர் பாளையங்கோட்டையை சேர்ந்த ஜான் சுபாஷ். இவர்கள் இருவரும் சென்னையில் பணிபுரிந்த போது, காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுந்தரியை நேற்று முன்தினம் மதியம் பிரசவத்துக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது, சுந்தரிக்கு வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவரிடம் ஆபரேஷன் மூலமாக குழந்தையை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் உறவினர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். இதில் குழந்தை வயிற்றிலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆபரேஷன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திண்டிவனம் டிஎஸ்பி கணேசன் மற்றும் ரோசணை காவல் நிலைய போலீசார், மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் இரவு 2 மணியளவில் குழந்தையின் உடலை பெற்றுக்கொண்டனர். அப்போது மருத்துவமனை சார்பில் குழந்தையின் உடலை பெற்றுக் கொண்டேன் என கையொப்பம் கேட்டதற்கு உறவினர்கள் கையொப்பம் போட மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் பணியின் போது அலட்சியமாக இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர் வளவனிடம் மனு அளித்தனர். இதற்கு அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.