தமிழகத்தில் நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 28 ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் லண்டனில் இருந்து நேற்று டெல்லி வழியாக சென்னை வந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய போது, விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடந்த 10 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் கண்கணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28 ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா என ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.