சென்னை ஐசிஎப்பில் பைனாஸ் நிறுவன ஊழியரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் மோதிரத்தை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
சென்னை, வில்லிவாக்கம், பாளையம்கோவில் தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 31). சென்னை, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் வேலையை முடித்துவிட்டு தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். வழியில் ஐசிஎப், நியூ ஆவடி ரோடு, பர்னிசிங் தொழிற்சாலை எதிரில் சிறுநீர் கழிப்பதற்காக வண்டியை நிறுத்தினார். அப்போது அங்கு 2 பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல் லோகேஸ்வரனை கத்தியைக்காட்டி மிரட்டி பணம், நகையை தரும்படி கேட்டனர். அவர் தர மறுத்ததால் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் செயின், 1 1/2 பவுன் மோதிரம் மற்றும் வெள்ளி பிரேஸ்லட் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக லோகேஷ்வரன் ஐசிஎப் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதனையடுத்து லோகேஷ்வரனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணாநகரைச் சேர்ந்த செல்வம் (வயது 24), ராதாகிருஷ்ணன் (வயது 25), உதயகுமார் (25) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 1/2 சவரன் எடையுள்ள சவரன் தங்கச்செயின் மற்றும் மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டனர்.