மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய முதலமைச்சர் நேற்றும், இன்றும் வெளிமாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று சேலம், திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி மையங்களை திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று மூன்று மாவட்டங்களில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் நேற்று இரவு மதுரை வந்து தங்கினார்.
இன்று 2வது நாளாக மதுரையில் ஆய்வு நடத்தினார். மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்படுவோருக்கான ஆக்சிஜன் படுக்கை வசதி பற்றாக்குறையை போக்கவும், விரைவில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மதுரை அருகிலுள்ள தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோப்பூர் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் காலை 10.50 மணிக்கு கார் மூலம் முதல்வர் தோப்பூருக்கு சென்றார். அவருக்கு இதைத்தொடர்ந்து 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் சிகிச்சை மையம் முழுவதையும் சுற்றி பார்த்த முதல்வர், அங்குள்ள சிகிச்சை வசதிகள் குறித்தும் அமைச்சர்கள், ஆட்சியர் அனிஷ்சேகர்,
மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தார். முதல்கட்டமாக 230 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது என்றும், எஞ்சிய படுக்கைகள் ஓரிரு நாளில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.