சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அதிமுக சார்பாக மிகப்பெரிய பிரச்சார அணி களமிறக்கப்பட்டுள்ளது. திமுகவை திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு தமிழகம் முழுக்க மிகப்பெரிய அணியை முதல்வர் பழனிச்சாமி அனுப்பி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக – பாஜக – பாமக ஆகிய முக்கிய கட்சிகள் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளன. தமிழகம் முழுக்க இதற்காக அதிமுக அதிரடி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
மூன்றாவது முறையாக வென்று ஹாட் டிரிக் அடிக்கும் திட்டத்தில் அதிமுக உள்ளது. முதல்வர் பழனிசாமியும் வன்னியர் உள் இடஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி, இலவச வாஷிங்க் மெஷின் என்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார். இதனால் தேர்தல் களத்தில் திமுக கொஞ்சம் ஆடிப்போய் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது தமிழகம் முழுக்க அதிமுகவிற்காக வாக்கு சேகரிப்பதற்காக அக்கட்சி சார்பாக மிகப்பெரிய நட்சத்திர படை களமிறங்க உள்ளது.
அதன்படி நாளையில் இருந்து அதிமுக சார்பாக சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், சமூக வலைதள பிரபலங்கள் பலர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். தமிழகம் முழுக்க எல்லா தொகுதிகளுக்கும் இவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதன்படி அதிமுக சார்பாக சினிமா பிரபலங்கள் கஞ்சா கருப்பு, குண்டு கல்யாணம், வையாபுரி, சிங்கமுத்து, அஜய்ரத்தினம், வெண்ணிற ஆடை நிர்மலா, குண்டு கல்யாணம், போண்டா மணி, சரவணன், மனோபாலா, அனுமோகன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர்கள் நாளையில் இருந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
பொதுவாக அதிமுகவில் இப்படி திரை பிரபலங்கள் பலர் பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுக்க இவர்கள் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்துள்ளனர். அதிமுகவில் ஜெயலலிதா இருந்த போது இப்படி திரை நட்சத்திரங்கள் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர். தற்போது அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.
கடந்த முறை அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்த செந்தில் இந்த முறை பாஜக சென்றுவிட்டார். ஆனாலும் பாஜக அதிமுக கூட்டணி என்பதால் இவரும் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்க போகிறார். அதிமுக அளவிற்கு திமுக பக்கம் நட்சத்திர பட்டாளம் இல்லை. திமுக பக்கம் இந்த அளவிற்கு நீண்ட திரை நட்சத்திர சப்போர்ட் இல்லை.
இது திமுகவிற்கு சின்ன பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பொதுவாக திரை நட்சத்திரங்கள் வந்தால் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏற்கனவே பாஜகவில் குட்டி கோலிவுட்டே கூடியிருக்கிறது. இதனால் அவர்களும் அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய போகிறார்கள். எனவே அதிமுக பிரச்சார மேடைகளில் அதிக கூட்டம், மக்கள் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.