மிலாது நபியை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து!

மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவதரித்த நாளை இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் “ மிலாது நபி ” பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அக்டோபர் 30ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம். இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான ‘மீலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வதோடு, இலாமியப் பெருமக்களுக்கு நெஞ்சினிக்கும் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியில், உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், சமக தலைவர் சரத்குமார், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலரும் மிலாது நபியை ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!