ரூ.70 கோடி மதிப்பில் பாலை டெட்ரா பாக்கெட்டுகளில் நிரப்பும் ஆலை – முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டம் ஈஞ்சாரில் ரூ.70.15 கோடி மதிப்பில் பாலை டெட்ரா பாக்கெட்டுகளில் நிரப்பும் ஆலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.25 கோடி மதிப்பில் நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017–-18–ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த அறிவிப்பினை தொடர்ந்து நேற்று (26–ந் தேதி) தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டம், ஈஞ்சாரில் ரூ.70.15 கோடி மதிப்பீட்டில் அதிவெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பாலை டெட்ரா பாக்கெட்டுகளில் நிரப்பும் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் பால் பண்ணைகளின் உட்கட்டமைப்பு மற்றும் நுகர்வோரின் மத்தியில் சுவையூட்டப்பட்ட அதிவெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட டெட்ரா பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இத்தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் ஆவின் இணையத்தின் மூலமாக நாளொன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அதிவெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்டு சுவையூட்டப்பட்ட டெட்ரா பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் ஆலையாகும்.

இதற்கான நிதி ஒதுக்கீடு நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் பெறப்படுவதற்கான நிர்வாக அனுமதி 18.2.2021 தேதியிட்ட அரசாணை எண்.32 மூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் பால் பண்ணைகளின் உட்கட்டமைப்பு மற்றும் நுகர்வோர்க்கு தரமான பால் மற்றும் பால் உபபொருட்களை தயாரிப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசானது கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் நொதியூட்டப்பட்ட பால் மற்றும் பால் உபபொருட்களான யோகர்ட், சுவையூட்டப்பட்ட கிரீக் யோகர்ட், கப் தயிர், புரோபயோடிக் தயிர், லஸ்ஸி, புரோபயோடிக் லஸ்ஸி, மோர் மற்றும் புரோபயோடிக் பானங்கள் தயாரித்து சிப்பமிடும் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதற்கான நிதி ஒதுக்கீடு நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் பெறப்படுவதற்கான நிர்வாக அனுமதி 27.10.2020 தேதியிட்ட அரசாணை எண்.144 மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அரசு முதன்மைச் செயலாளர் (கால்நடை பராமரிப்பு) கே.கோபால், பால்வளத்துறை ஆணையர் சு.நந்தகோபால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!