வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! புதுவை, நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், நாகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பருவ மழை தொடங்கவுள்ளதால், அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை மீட்டு வேறு இடத்தில் தங்க வைக்க முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் பாரதீப்பிற்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அக்டோபர் 23ம் தேதி, மேற்கு வங்கம் சாகர் தீவுகள் அருகே கரை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், சென்னை எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் தூர எச்சரிக்கைக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சென்னை நகரின் பலபகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது.  மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உருவானது.

Translate »
error: Content is protected !!