ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 3ம்நாள் – நம்பெருமாள் முத்துவளையம் என்படும் முத்துப்பாண்டியன்கொண்டை, ரத்தினஅபயஹஸ்தம், ரத்தினதிருவடியுடன் பக்தர்களுக்கு சேவைசாதித்தார்
108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 15ம் தேதி மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் 3ம் நாளான இன்று காலை 6.35 மணிக்கு நம்பெருமாள் முத்துவளையம் எனப்படும் முத்துப்பாண்டியன்கொண்டை அணிந்து, மார்பில் இருதலைப்பட்சி பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், ரத்தின திருவடி, முத்துச்சரம், அடுக்குபதக்கங்கள் உள்ளிட்ட திருவாபரணங்களை சூடியபடி தங்கபல்லக்கில் திருமாமணிமண்டபம் என்ற மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு உடையவர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பின்தொடர்ந்துவர உள்பிரகாரங்களின் வழியே வலம்வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளினார்.
அதனைத்தொடர்ந்து அரையர் சேவைஎனப்படும் அபிநயம், வியாக்யானம், பெரியாழ்வார் திருமொழி கேட்டருளிய அவர், பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார். நம்பெருமாள் புறப்பாட்டின்போது பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, அங்குள்ள அலங்காரப்பிரியனான பூலோகவைகுண்டப்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.