ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 7ம்நாள்

ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 7ம்நாள்நம்பெருமாள் முத்துக்கிரீடம், ரத்தின அபய ஹஸ்தம், மகரகண்டிகை அணிந்து பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதும், பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, இராப்பத்து என 21நாட்கள் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெறும்.

இதன் திருவாய்மொழி எனப்படும் பகல்பத்து உற்சவத்தின் 7ம் திருநாளான இன்றையதினம் காலை 6.37 மணிக்கு நம்பெருமாள்(உற்சவர்) முத்துக்கிரீடம் அணிந்து, மார்பில் மகாலட்சுமி பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், மகரகண்டிகை, காசுமாலை, புஜகீர்த்தி உள்ளிட்ட ஆபரணங்களை சூடிக்கொண்டு அரையர்கள் கூறும் பாசுரங்களை கேட்டபடி உள்பிரகாரங்களில் தங்க பல்லக்கில் வலம்வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில், பன்னிரு ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளச்செய்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார்.

வரிசையில் நின்று காத்திருந்து பெருந்திரளான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு நம்பெருமாளை சேவித்துச் சென்றனர். இந்நாட்களில் மூலவர் முத்தங்கியில் பக்தர்களுக்குச் சேவைசாதித்துவருகிறார்.

Translate »
error: Content is protected !!