ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் தோல்வியில் இருந்து வெளியே வந்து போராடுவார்கள் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக இழக்கும் என்று முன்னாள் வீரர்கள் மார்க் வார்க் (ஆஸ்திரேலியா), மைக்கேல் வாகன் (இங்கிலாந்து) ஆகியோர் தெரிவித்தனர்.
இதற்கிடையே 2-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியது. இந்திய வீரர்கள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அவர்கள் இன்னும் கொஞ்சம் நேர்மறையான நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும். அப்படி செல்வதுதான் சிறந்த வழியாக இருக்கும்.உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கோலி இல்லாதது கடினமாக இருக்கும்.
ஆனால் இந்திய வீரர்கள் தோல்வியில் இருந்து வெளியே வந்து போராடுவார்கள் என்று நான் நம்புகிறேன். இங்கு (இந்தியாவில்) எல்லோரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் பின்னர் அதை ஒரு கெட்ட கனவாக எடுத்து கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பேட்டிங் சிறப்பாக இல்லை. அந்த அணி பேட்டிங்கில் வார்னர் 30 சதவீதம், சுமித் 30 சதவீதம், மற்றவர்கள் 30 சதவீதம் இருக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கை. அவர்களது பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. ஆனால் பேட்டிங் மிகவும் வலுவாக இல்லை என்றார்.