கான்பெராவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. சிட்னியில் நடந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
ஏற்கனவே தொடரை இழந்த இந்திய அணி, ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், கான்பெர்ரா நகரில் ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியா, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள், ஜடேஜா 66, ஹர்திக் பாண்ட்யா 76 ரன்களை எடுத்தனர்.
அடுத்து, வெற்றிக்கு 303 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலியா களம் புகுந்தது. அந்த அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை 289 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்தியா சார்பில் முதல்முறையாக பங்கேற்று பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன், 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.