பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அவர்களுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் சகோதரரை மீண்டும் கைது செய்யக்கோரி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆளுங்கட்சி எம்பிக்கள் மனு அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் 21ம் தேதியில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்து செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். அவரது கைது தொடர்பில் வலுவான சாட்சிகள் காணப்பட்ட போதிலும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை. எவ்வித சட்ட அனுமதியுமின்றி ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு பயங்கரவாதத்திற்கு துணையாக செயற்பட்ட ரியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சியின் 100க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கடந்த 9ம் தேதியன்று அலரி மாளிகையில் வைத்து அளித்தனர்.