இலங்கையில், தலைமறைவான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் இன்று கைது செய்யப்பட்டார். அவருக்கு அரசு சிறப்பு அடைக்கலம் தந்ததாக கூறப்படுவதை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிராகரித்துள்ளது.
இலங்கை எம்.பி. ரிஷாட் பதியூதீன் மீது அரசு வளங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அவரை கைது செய்யும்படி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவளிக்கப்பட்டு 5 நாட்களான நிலையில், அவர் தலைமறைவானார்.
இதனால், காவல்துறையினர் நடவடிக்கைகள் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய பிரமுகரும், போக்குவரத்து அமைச்சருமான திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, கண்டியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் திலும் அமுனுகம, ரிஷாட் பதியூதீனை பாதுகாப்பதற்கான எந்த தேவையும் அரசுக்கு இல்லை என்றார்.’
எந்தவொரு நபருக்கும் விசேச அடைக்கலம் கொடுப்பதற்கு அரசுக்கு எண்ணமில்லை. அவசியமும் இல்லை. ரிஷாட் பதியூதீன் என்பவர் நமது அரசுக்கு ஆதரவு வழங்கியவரும் இல்லை.
இலங்கை நாட்டு பாதுகாப்புப் பிரிவு புலிகளின் கே.பி போன்றவர்களையே கைது செய்த நிலையில் தற்போது உள்நாட்டில் இருக்கும் பிரமுகர்களை கைது செய்ய தாமதம் ஏற்படுவது குறித்து சந்தேகம்தான் ஏற்படுகின்றது.
அனைவராலும் தெரிந்த ஒரு நபர் கைது செய்யப்படாமல் இருப்பது அனைவருக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகமாகும். ரிஷாட் பதியூதீனிடம் தேவைகளைப் பெற்றவர்கள் இன்று அரசே அவரைப் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டி வருவதாக குறிப்பிட்டார்.
இந்த சூழலில் தெஹிவளை பகுதியில் வைத்து இலங்கை எம்.பி. ரிஷாட் பதியூதீன், இன்று காலை கைது செய்யப்பட்டதாக, இலங்கையில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
—