இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது கனவு போல் உள்ளதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது. ஜனவரி வரையிலான 3 மாத சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் டி 20 தொடருக்கான அணியில் விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இடம்பெற்றுள்ளனர்.
இதில், 29 வயதாகும் வருண் சக்ரவர்த்தி தமிழகத்தை சேர்ந்தவர். விக்கெட் கீப்பராக இருந்து, 2018ம் ஆண்டில்தான் சுழற்பந்துவீச்சுக்கு மாறிப் பயிற்சி எடுத்தார். இதுவரை முதல்தரப் போட்டிகளில் 12 டி20 போட்டிகளில் மட்டுமே வருண் சக்ரவர்த்தி விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து வருண் சக்ரவர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எனக்கு இடம் கிடைத்ததாக சக வீரர்கள் சொன்னதும், எனக்கு ஏதோ கனவில் இருப்பதைப் போன்று இருந்தது. எனக்கு இந்திய அணியில் இடமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டே இருந்தேன்.
என்னுடைய அடிப்படைக் குறிக்கோள் எந்த அணியில் இடம் பெற்றாலும் சிறப்பாக விளையாடுவது மற்றும் அணியின் வெற்றிக்காகத் தொடர்ந்து பங்களிப்புச் செய்வதாகும். இதே பணியை இந்திய அணிக்கும் நான் செய்வேன். தேர்வாளர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.