மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அதன் கொள்ளளவு 51 அடியை எட்டியது. இதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோர மாவட்டங்களான தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 45 அடியில் இருந்து சிறிது சிறிதாக உயர்ந்து. இன்று காலை நிலவரப்படி 50 அடியாக இருந்தது.
இன்று காலையில் இருந்து தொடர்ந்து மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பிற்பகல் 2 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 51 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 53 அடியில் இரண்டாம் கட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கையும் 55 அடியில் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, உபரி நீர் ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது.