இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயலால், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வெள்ளத்தில் மிதக்கின்றன.
புரெவியலானது, முதலில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையை கடந்து பிறகு தமிழகம் நோக்கி நகர்ந்தது. இப்புயலால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழை வெளுத்து வாங்கியதால், இலங்கையின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அதேபோல், திரிகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே புரெவி புயல் கரையை கடந்ததால், அப்பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. வீடுகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்து, மின் வினியோகமும் தடைபட்டது.
புரெவி புயலால் யாழ்ப்பாணம் மாகாணத்தில் 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேரை காணவில்லை என்றும் இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மாகாணத்தில் 15 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 141 வீடுகள் பாதியளவுக்கு சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன.
எனினும், புயல் சேதங்கள் குறித்த முறையான மதிப்பீட்டிற்கு பிறகே ஒட்டுமொத்த பாதிப்பு நிலவரம் தெரிய வரும் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.