காயம் அடைந்திருந்த ரோகித் சர்மா உடற்தகுதியை நிரூபித்ததால், ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். முதல் இரண்டு டெஸ்டில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த அவர், தற்போது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து, தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். ஐபிஎல் தொடரின்போது தொடைப்பகுதியில் (ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி) காயம் ஏற்பட்டதால் துபாயில் இருந்து ஆஸ்திரேலியா செல்லவில்லை. இந்தியா திரும்பி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை மேற்கொள்ள சென்றார்.
அங்கு காயம் குணமடைந்து உடற்தகுதியை பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் உடற்தகுதியை ரோகித் சர்மா நிரூபித்துவிட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உடற்தகுதி பெற்ற ரோகித் சர்மா, நாளை அல்லது நாளைமறுநாள் ஆஸ்திரேலியா புறப்பட வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதனால் 17-ந்தேதி தொடங்கும் முதல் போட்டியிலும், 26-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டியிலும் ரோகித் சர்மா பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் ரோகித் சர்மா உடற்தகுதி பெற்றுவிட்டார் என்பதை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.