இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய ஏ அணியின் ஆல்–ரவுண்டர் 21 வயதான கேமரூன் கிரீன் தலையில் காயமடைந்தார். பும்ராவுக்கு அவர் பந்து வீசிய போது, அதை அவர் நேர்பகுதியில் ஓங்கி அடித்தார். பந்து தலைக்கு நேராக வந்ததால் அதை கேட்ச் செய்ய கேமரூன் கிரீன் முயற்சித்தார். ஆனால் வந்த வேகத்தில் பந்து சிக்கவில்லை. அவரது தலையின் வலது பக்கத்தில் பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவர் மைதானத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டார். உடனடியாக எதிர்முனையில் நின்ற இந்திய வீரர் முகமது சிராஜ் உதவி செய்தார். இதைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் களத்தை விட்டு வெளியேறிய கேமரூன் கிரீனுக்கு பந்து தாக்கியதால் தலையில் லேசான அதிர்வு இருப்பது தெரிய வந்தது. எஞ்சிய இரண்டு நாட்களும் அவர் விளையாடமாட்டார்.
பந்து தலையில் தாக்கினால் மாற்று வீரரை அனுமதிக்கும் விதிமுறைப்படி பேட்ரிக் ரோவ் சேர்க்கப்பட்டார். முதலாவது பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய கேமரூன் கிரீன் இந்த ஆட்டத்திலும் 6.1 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். முதலாவது டெஸ்டில் அறிமுக வீரராக களம் காண பிரகாசமான வாய்ப்பு இருந்த நிலையில் தற்போது காயத்தில் சிக்கியிருப்பதால் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.