வைகுண்ட ஏகாதசி 9ம்நாள் விழா – நம்பெருமாள் முத்து சாய்வுக்கொண்டை, முத்து ஆபரணங்கள், முத்து அபயஹஸ்தம் அணிந்து சேவை சாதித்தார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் கடந்த 15ம்தேதி திருநெடுந்தாண்டகத்தினையடுத்து, 16ம்தேதி தொடங்கி நடைபெற்றுவரும் சிறப்புவாய்ந்த வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்புவிழாவின் பகல்பத்து நாட்கள் நிகழ்வில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி உலாவரும் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்து வழிபாடு செய்வர்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் 9ம் திருநாளான இன்று காலை ‘முத்துக்குறி‘ எனப்படும் முத்து சாய்வுக்கொண்டை, முத்தங்கி, முத்து அபயஹஸ்தம், முத்து ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளி சேவை சாதித்துவந்த நம்பெருமாள்(உற்சவர்) திருமங்கையாழ்வாரின் திருவாய்திருமொழி பாசுரங்களை கேட்டருளி பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்துவருகிறார்.
அரையர்கள் சேவையினையடுத்து இரவு மூலஸ்தானத்தை சென்றடைவார். மூலவரின் முத்தங்கி சேவையினை வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் கண்டுமகிழ்ந்த பக்தர்களுக்கு, நம்பெருமாள் உற்சவரும் முத்தங்கி மற்றும் முத்து சாய்வுக்கொண்டையணிந்து சேவைசாதித்ததை ஆயிரக்கணக்காண பக்தர்கள் வழிபாடு செய்தனர்.