வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழா – நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார், திரளான பக்தர்கள் தரிசனம்.
108வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீர்ங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி என 21நாட்கள் கொண்டாடப்படுகிறது.
கடந்த 15ம்தேதி தொடங்கிய திருநெடுந்தாண்டகத்தையடுத்து, பகல்பத்து திருநாளில் நம்பெருமாள்(உற்சவர்) தினசரி ஒவ்வொருஅலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்துவந்தார். பகல்பத்தின் கடைசிநாளான இன்று நம்பெருமாள் அசுரர்களிடத்திலிருந்து தேவர்களைக்காக்க மோகினியாக உருவெடுத்தார், இதனை உணர்த்தும்வகையில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ரத்தினக்கிளி, ரத்தினம் பதித்த தங்க அபயஹஸ்தம் அணிந்தும், பின்புறம் வாசனைமிக்க ஏலக்காய் ஜடையினை தரித்தும் மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் வெள்ளிபல்லக்கில் புறப்பட்டு உலாவந்து, அரையர்கள் சேவை எனப்படும் பாசுரங்களைக் கேட்டருளி, பின்னர் ஆழ்வார்கள் மத்தியில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்துவருகிறார். நம்பெருமாளை பலஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சேவித்துவருகின்றனர்.
முக்கிய திருநாளான வைகுண்டஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை அதிகாலை 4.45மணிக்கு நடைபெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இன்று மாலை 6மணிமுதல் நாளைகாலை 8மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், நாளை காலை 8மணிமுதல் இரவு 8மணிவரை பரமபதவாசல் செல்வதற்கும், மூலவர் முத்தங்கிசேவை சேவிக்க இலவச மற்றும் கட்டண வழியில் செல்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.