திருப்பதி அருகே லாரி வேன் நேருக்கு ராக மோதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்

திருப்பதி அருகே லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உட்பட 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்

திருப்பதி,

பெங்களூரு அடுத்த நங்கிலியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ராஜூ. இவரது வீட்டில் சகோதரர்களான விஜயகுமார், சேகர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 3 குடும்பத்தாரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் வாடகை வேன் மூலம் திருப்பதிக்கு வந்தனர்.

தரிசனம் முடித்து விட்டு நேற்று வேனில் ஊருக்கு புறப்பட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் திருப்பதி அடுத்த பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது சித்தூரில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற லாரியும் வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி விஜயகுமாரின் தாய் ராஜம்மாள் (வயது80), அவரது மனைவி அன்னபூரணி (60), ஜோதி (14) என்ற சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்‌. மேலும் வேனில் இருந்தவர்கள் படுகாயமடைந்து அலறி கூச்சலிட்டனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டனர். பூதலபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 6 பேரை மீட்டு திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியானவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரூயா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!