காஸ் கம்பெனி ஊழியர் என கூறி நூதன முறையில் பணம் அபேஸ் செய்த பெண்

காஸ் கம்பெனி ஊழியர் எனக்கூறி நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த பலே பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

சென்னை ஆழ்வார்பேட்டை சி.வி. ராமன் சாலையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 78). முதியவரான இவர் ஓய்வு பெற்ற அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஆவார். கடந்த 21ம் தேதி இவரது வீட்டிற்கு வந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் காஸ் கம்பெனியில் ஊழியராக பணிபுரிவதாக கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.

மேலும் வீட்டிலுள்ள கேஸ் கனெக்‌ஷனை சரி பார்க்க வேண்டும் என கூறி வீட்டுக்குள வந்துள்ளார். கேஸ் அடுப்பை பார்த்த அவர் அடுப்பில் பிரச்சனை உள்ளதாகவும், இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் இல்லையென்றால் காஸ் சிலிண்டர் வராது என தெரிவித்துள்ளார். இதற்கு 7,300 ரூபாய் வழங்க வேண்டும் நாளை சர்வீஸ் செய்பவரை அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய முத்துகிருஷ்ணன் உடனடியாக 7,300 ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்துள்ளார். பின்னர் நீண்ட நாட்களாகியும் சர்வீஸ் ஊழியர் வராததால் சந்தேகமடைந்த முத்துகிருஷ்ணன் காஸ் கம்பெனியை தொடர்பு கொண்ட போது ஊழியர் ஏதும் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துகிருஷ்ணன் நேற்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!