அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி வரும்14 ஆம் தேதி அவனியாபுரம், 15 ஆம் தேதி பாலமேடு மற்றும் 16 ஆம் தேதி அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் அலங்காநல்லூரில் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்படுகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தெரிவித்தார்.