105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்யும் மூதாட்டிக்கு குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருது

மேட்டுப்பாளையத்தில் 105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்யும் பாப்பம்மாள் என்ற மூதாட்டிக்கு குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள் (வயது 105). இவர் மருதாச்சல முதலியார், வேலம்மாள் தம்பதியருக்கு கடந்த 1915ம் ஆண்டு மகளாக பிறந்தார்.

இவருக்கு நஞ்சம்மாள், பழனியம்மாள் ஆகிய 2 சகோதரிகள் இருந்தனர். பாப்பம்மாள் தனது சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்து விட்டார். இதனால் அவருடைய பாட்டி இவர்கள் 3 பேரையும் தேக்கம்பட்டிக்கு அழைத்து சென்றார்.

பின்னர் மளிகைக்கடை வைத்து அவர்கள் தங்களது வாழ்க்கையை தொடங்கினார்கள். பாட்டி இறந்தபின் மளிகைக்கடையை பாப்பம்மாள் பார்த்து கொண்டார். மேலும் அதே கிராமத்தில் ஓட்டல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1992ம் ஆண்டு பாப்பம்மாளின் கணவர் ராமசாமி மரணம் அடைந்தார். இதனால் தனது அக்காள் நஞ்சம்மாளுடன் பாப்பம்மாள் வசிக்க தொடங்கினார். இதற்கிடையே பாப்பம்மாளின் 2 சகோதரிகளும் மரணம் அடைந்தனர்.

இதனால் நஞ்சம்மாளின் மகள்களுடன் தற்போது பாப்பம்மாள் வசித்து வருகிறார். கடைகள் மூலம் கிடைத்த வருமானத்தை சேர்த்து வைத்து அப்பகுதியில் விவசாய நிலத்தை வாங்கி, விவசாயமும் செய்தார். தற்போது 105 வயது தொடங்கியுள்ள பாப்பம்மாள் தனதுஏக்கர் நிலத்தில் அவரை, துவரை, பச்சை பயிறு மற்றும் வாழையை பயிரிட்டுள்ளார்.

இதுகுறித்து பாப்பம்மாள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரங்களில் கம்பு, ராகி, சோளம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவேன். மதியம் களி, கீரைவகைகளும், இரவு கொள்ளு, அவரை, பட்டாணி உள்ளிட்ட சிறுதானியங்களை சாப்பிடுவேன். வயது மூப்பு காரணமாக தற்போது அளவான உணவை எடுத்துக்கொள்கிறேன்.

அதிலும் குறிப்பாக வாழை இலையில் உணவுகளை உட்கொண்டு வருகிறேன். வெள்ளாட்டுக்கறி குழம்பு, பிரியாணி போன்ற அசைவ உணவுகளையும் விரும்பி சாப்பிடுகிறேன். சிறுவயதில் எங்களது கிராமத்தில் பள்ளிக்கூடம் எதுவும் இல்லாத காரணத்தினால் ஒரு சத்திரம் ஒன்றில் எழுதி பழகினேன்.

வீட்டு வேலைகளையும், விவசாய வேலைகளையும் செய்து வந்த காரணத்தினால் நோய் எதுவும் இல்லை. வயிற்றுவலி வந்தால் வெற்றிலையில் உப்பை வைத்து சாப்பிடுவது, தலைவலி வந்தால் நெற்றியில் பாக்கு கொட்டை வைத்து அதை குணப்படுத்திக்கொள்வேன் என்று கூறி உள்ளார்.

 

Translate »
error: Content is protected !!