அமைச்சர் காமராஜூக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை ; எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்திப்பு

அமைச்சர் காமராஜூக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், இம்மாத தொடக்கத்தில் சொந்த ஊரான மன்னார்குடியில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு விழாவில் பங்கேற்றார். பின்னர், சென்னை திரும்பும் வழியில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனாவை பரிசோதனை மேற்கொண்டத்தில், பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அங்கேயே அவர் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர், 7-ந் தேதி அவருக்கு எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

அமைச்சர் ஆர்.காமராஜூவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவலை ஆஸ்பத்திரி நிர்வாகமே வெளியிட்டது. ஒருசில நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பினார். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு அவர் சென்றார்.

இந்த நிலையில், மீண்டும் அமைச்சர் காமராஜூவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவசர அவசரமாக அவர் சென்னை திரும்பினார். அவருக்கு ஆக்சிஜன் அளவு 61க்கு கீழ் சென்றது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அரசு டாக்டர்கள் செயற்கை சுவாச சிகிச்சை உதவியுடன் அளித்த சிகிச்சையில் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் ஆக்சிஜன் அளவு 91 ஆக உயர்ந்தது. தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால், எக்மோ சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர்.

இந்த நேரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 8.15 மணி அளவில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சையுடன், தொடர் கண்காணிப்பில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு வந்து அமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் இவரும் மருத்துவர்களுடன் கலந்துரையாடினர். அவரது குடும்பத்தினரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.

 

Translate »
error: Content is protected !!