சம்பளம் பெறுவதை தாண்டி அதிகாரிகள் லஞ்சம் பெறுவது, பிச்சை எடுப்பதற்கு சமமானது என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடுமையாக சாடியுள்ளது.
நெல் கொள்முதல் தொடர்பாக, சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், விவசாயிகளை காப்பாற்ற, தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கிருபாகரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘விவசாயிகள் கொண்டு வரும் ஒரு நெல்மணி முளைத்து வீண் போனால், அதற்கான தொகையை சம்மந்தப்பட்ட அதிகாரியிடமே வசூலிக்க வேண்டும். அதிகாரியிடம் பணம் வசூலித்தால்தான் இதுபோன்ற அலட்சிய நிகழ்வுகள் தடுக்கப்படும் என்றனர்.
அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது என்பது, பிச்சை எடுப்பதற்கு சமமானது என்று கடுமையாக சாடிய நீதிபதிகள், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
நெல் கொள்முதல் செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு விரைந்து முடிவெடுப்பது அவசியம். விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை? எடுக்கப்பட்டுள்ளது என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இது தொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குனர், நாளைக்குள் (அக். 16ம் தேதி) பதில் அளிக்க உ த்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.