சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம்: எடப்பாடி திறந்து வைத்தார்
சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (22–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 7.9.2018 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கடந்த வைர விழா ஆண்டு நிறைவு விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது.
அந்த வகையில், இப்பல்கலைக்கழகத்தின் 160–ம் ஆண்டு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றினை குறிக்கும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்றும்,
இம்மையத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆரின் முன்னோடி திட்டங்களான சத்துணவு திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பை ஆராயும் முதல் உயர்கல்வி நிறுவன ஆராய்ச்சி மையமாக இம்மையம் விளங்கும். மேலும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். ஆட்சி புரிந்த 10 ஆண்டுகளில் அவர் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டுகள், பொது நிர்வாகம், திரைப்படத் துறை போன்றவற்றில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாகவும் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தின் துவக்கம் முதல் இன்றைய வளர்ச்சி வரை வரலாற்று ரீதியில் ஆராய்தல், டாக்டர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் உயர்கல்வி துறையில் ஏற்பட்ட மேம்பாடுகளை ஆராய்தல்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெண்கள், நலிவுற்றோர், பின்தங்கிய மக்களின் உயர்வுக்கு ஏற்படுத்திய திட்டங்கள், அவற்றின் வெற்றி பற்றி ஆராய்தல், பொது நிர்வாகத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு குறித்து ஆராய்தல் போன்ற ஆய்வுப் பணிகள் இந்த ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கௌரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.