நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம், துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு எழுதிய நாள் முதல் அந்த மாணவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைவோமா? என்ற எண்ணத்தில் கனிமொழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த மாணவி 12ஆம் வகுப்பில் 600-க்கு 562 மதிப்பெண் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தற்கொலை செய்த அரியலூர் மாணவி கனிமொழிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
நீட்தோல்வி பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரின் பெற்றோருக்கும் , குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன், திமுக தனது அரசியல் நாடகத்தையும் , நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும். மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர் கொள்ள வேண்டுமென உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.