கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது,
அரசு காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டணங்களை பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும். இது சோதனையான நேரம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு மறந்து செயல்பட வேண்டும். நூறு நாட்களுக்கு பின்னரே கருத்து சொல்ல வேண்டும் என்று இருந்தேன்.
எங்களுடைய அரசை குறை சொன்னதால்தான், நாங்கள் கருத்து சொல்ல வேண்டி வந்தது. கிராமங்களில் தொற்றுப்பரவலை தடுக்க, புதிதாக வருபவர்களுக்கு உடனடியாக தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிற நடைமுறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
கிருமிநாசினி தொடர்ந்து அடிக்க வேண்டும். மேற்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அதிக அளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. திருப்பூரில் பல மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். கோவை மாவட்டத்திலும் பல மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிகிறார்கள். பரிசோதனைகள் அதிகரித்தால் மட்டுமே தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
கடந்த ஆண்டு தடுப்பூசி இல்லாத காலகட்டத்தில் தொற்றுப்பரவலை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், தற்போது அந்த நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். உடனடியாக ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிப்பது, கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பதுதான் தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார்.